(நா.தினுஷா) 

புலம் பெயர் இலங்கையர்களுக்கு இறக்குமதி தீர்வையின்றி வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக எந்த அனுமதியும் வழங்கவில்லை என்றும் அவ்வாறான போலி ஆவணங்களை கண்டு ஏமாற வேண்டாம் என்றும் நிதி அமைச்சு எச்சரித்துள்ளது. 

வெளிநாடுகளிக்கு சென்று தொழில் புரியும் இலங்கையர்களுக்கு  வரி நிவாரணத்தின் அடிப்படையில் வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு போலி ஆவணமொன்று பகிரப்படுவதாக நிதி அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

மேலும் இந்த ஆவணப் பத்திரம் முகநூல் உள்ளிட்ட ஏனைய சமூக வலைத்தளங்களினூடாகவும் ஏனைய ஊடகங்களினூடாகவும் பகிரிப்படுகிறது. எனவே  இந்த ஊழல் செயற்பாட்டில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று  மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.  

இவ்வாறு வெளிநாடுகளில் தொழில்புரிபவர்களுக்கு  தீர்வையற்ற வாகன கொள்வனவுக்கான  அனுமதி பத்திரத்தை நிதி அமைச்சு வெளியிட வில்லை. ஆகவே இதுபோன்ற  ஆவனங்கள்  எதுவும் பகிரப்படுமாக இருந்தால்  அவை  மக்களை ஏமாற்றும் போலி ஆவணங்களாகும்.  

நிதி அமைச்சின் வியாபாரம், முதலீட்டு கொள்கை திணைக்களத்தினூடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் முக்கிய சேவைகளை www.treasury.gov.lk என்ற உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வழியாக  பார்வையிட முடியும்.  இந்த இணையத்தளத்தின் சகல வேலைத்திட்டங்களும் பதிவு செயப்பட்டுள்ளதோடு வரிவிலக்குகள் தொடர்பான முழுமையான விபரங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.