(இரா.செல்வராஜா)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில் அந்த உறுப்பினர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற  உறுப்பினருமாகிய தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க ,டிலான் பெரேரா , ஏ.எச்.எம்.பௌஸி, லக்ஷ்மன் யாப்பா அபேகுணவர்தன,விஜித விஜயமுனி சொய்சா ஆகியோர் கடந்த சனிக்கிழமை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். 

விஜித விஜயமுனி சொய்சாவை தவிர ஏனைய நால்வரும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற  உறுப்பினர்களாவர். விஜித விஜயமுனி சொய்சா தான் நீதிமன்றத்தை நாடப்போவதில்லையென்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த  தயாசிறி ஜயசேகர,

குறிப்பிட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் யாப்பு விதிகளை மீறி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டது. எனினும் அவர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்காததால் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.