இன்றைய திகதியில் பிரசவத்தின் போது ஏற்படும் வலி தவிர்க்க முடியாதது. இதனை முழுமையாக தவிர்ப்பதற்காக அறிமுகமாயிருக்கும் இருக்கும் நவீன சிகிச்சை தான் ‘ஹிப்னோ பர்த்திங்’.

குழந்தைப் பிறப்பு என்பது இனிமையான ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வின் போது ஏற்படும் மன அச்சத்தை போக்கி, வலியை குறைத்து கொள்ள உதவும் சிகிச்சைதான் ஹிப்னோபர்த்திங்.

குறிப்பாக ஒவ்வொரு பெண்ணின் பிரசவத்தின்போது கேட்டகாலமைன் என்ற திரவம் உடலில் உற்பத்தியாகி, வயிற்றில் இருக்கும் சிசுவின் நகர்வை இறுக்கமாக்கி, வலி மிகுந்த அனுபவமாக மாற்றி விடுகிறது. இந்நிலையில் இந்த புதிய நுட்பம் மூலமாக மனதை எளிமைப் படுத்தப்படுவதால் அது இனிமையான அனுபவம் என ஆழ்மனத்தில் பதிய வைப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும். பிறகு ஆழ்மன நம்பிக்கையின் காரணமாக எண்டோமார்பின் என்ற திரவம் சுரந்து, குழந்தையை எளிதில் வெளிவர உதவுகிறது.

இன்றைய திகதியில் பிரசவத்தின்போது பெண்களுக்கு பெரும்பாலும் எபிடுரல் அனஸ்தீஸியா எனப்படும் மயக்கமருந்து அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக வலியற்ற நிலையில் பிரசவம் நடைபெறுகிறது. ஆனால் ‘ஹிப்னோ அனஸ்தீஸியா ’என்ற நுட்பத்தின் மூலம் அளிக்கப்படும் பயிற்சியால், பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான வலி உணர்வு குறைக்கப்படுகிறது. இதனால் குழந்தை ஆரோக்கியமாகவும், அமைதியாகவும், தெளிவான மனநிலையுடனும் பிறக்கிறது. குழந்தை பாதுகாப்பாகவும் தாயின் வயிற்றில் இருந்து வெளியேறும். 

இதன் போது கர்ப்பமான பெண்களுக்கு எந்தவிதமான மருந்தோ ,சிகிச்சையோ தரப்படுவதில்லை. தாயின் மனநிலையை அறிந்து, அவருக்கு குழந்தைப்பேறு குறித்த அச்சத்தை மனதில் இருந்து அகற்றி, பிள்ளைப்பேறு ஒரு இனிமையான அனுபவம் என்ற உண்மையை மகிழ்ச்சி அலைகளாக அவர்களின் ஆழ்மனதில் புரியவைத்து, பதிய வைக்கிறோம். 

இதனை கணவன் மனைவி என இருவரும் பயிற்றுவிக்கிறோம். இதன்மூலம் அவர்களின் மனதில் உள்ள இறுக்கம் கரைகிறது. பிரசவம் எளிமையாகிறது. அத்தருணத்தில் இவர்கள் இயல்பாக செய்து கொள்ளும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் கர்ப்பகால பராமரிப்புகளுக்கு எந்தவித தடையும் இல்லை.

பொதுவாக இந்தவித முறையான பயிற்சி, பெண்கள் கருத்தரித்த ஐந்தாவது மாதம் முதல் மேற்கொள்ளலாம். எந்த மகப்பேறு மருத்துவரிடம் கர்ப்ப கால பராமரிப்பு சிகிச்சை செய்து கொள்கிறீர்களோ.. அவர்களின் உதவியோடு இந்த பயிற்சியை பெறலாம். இதுகுறித்த விழிப்புணர்வு தற்போது இளம் பெண்களிடையே அதிகரித்து வருகிறது.

தொகுப்பு அனுஷா.