கருக்கலைப்புக்கு புகழ்பெற்ற அமெரிக்க வைத்தியரொருவர் சமீபத்தில் உயிரிழந்தார். அவரது வீட்டுக்குள் சென்ற உறவினர்கள் கண்ட விடயங்கள் பெரிதும் வியப்படைய செய்துள்ளது.

இல்லினாயிசைச் சேர்ந்த வைத்தியர் உல்ரிச் என்பவர், வரலாற்றிலேயே அதிக கருக்கலைப்புகளை செய்தவர் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஏராளமான கருக்கலைப்புகளைச் செய்துள்ளார்.

இந்நிலையில்,  கடந்த 3ஆம் திகதி அவர் உயிரிழந்ததையடுத்து, அவரது வீட்டுக்கு சென்ற அவரது உறவினர்கள், அவரது வீட்டிலுள்ள அறை ஒன்றில் ஏராளமான கருக்கள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு திகைப்படைந்தனர்.

அந்த அறையில், 2,246 கருக்கள் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு, கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் இரசாயனம் ஒன்றிற்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

2016ஆம் ஆண்டு, சரியான முறையில் நோயாளிகளை கவனிக்க தவறியதற்காகவும், தேவையான ஆவணங்கள் பல அவரிடம் இல்லாததற்காகவும் அவரது மருத்துவ உரிமம் இரத்து செய்யப்பட்டது.

அப்போது 71 வயதுடையவராக இருந்த உல்ரிச், ஆறு மாதங்களுக்கு பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் 1970, 80களில் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய அதே முறைகளையும், மயக்க மருந்து கொடுக்கும் முறையையும் 2016 ஆம் ஆண்டிலும் பயன்படுத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஆனால், தனது 43 வருட வைத்தியப்பணியின்போது கருக்கலைப்பு செய்யப்பட்ட ஒரு நோயாளிக்கு கூட மாரடைப்பு ஏற்படவோ, அல்லது ஒருவர் கூட உயிரிழக்கவோ இல்லை என வாதிட்டார் வைத்தியர் உல்ரிச்.

வரலாற்றிலேயே அதிக அளவு கருக்கலைப்பு செய்தவர் என கூறப்படும் அளவுக்க உல்ரிச் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளதாக பிரபல அமெரிக்க நாளிதள் ஒன்று அவரை விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.