(நா.தனுஜா)

ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டில் சில உடன்படிக்கைகள் மூலமாக நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய முற்பட்டார். எனவே அவருக்கு எதிராகக் களமிறங்கிய மஹிந்த ராஜபக்ஷவை நாங்கள் ஆதரித்தோம். அதேபோன்று 2015 இல் நிலவிய சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிர்பந்தம் காணப்பட்டது. 

எனவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கினோம். ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் எவ்வாறு செயற்பட வேண்டுமோ, அதற்கேற்றவாறு சிந்தித்து நாம் எமது அடுத்தகட்ட நகர்வுகளை செயற்படுத்துகின்றோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜே.வி.பி.யின் முன்னாள் பொதுச்செயலாளரான லயனல் போபகே அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஜனதா விமுக்தி பெரமுன இலங்கை மக்கள் இன்று எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டறியத் தவறினால் அதுவும் பழைய பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளைப் போன்று பெயர்ப்பலகை அளவிலான மற்றுமொரு இடதுசாரிக் கட்சியாகவே மாறவேண்டிவரும் என்று கூறியிருப்பதுடன், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கியது தவறு என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுபற்றி வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.