(எம்.மனோசித்ரா)

உள்நாட்டு போரின் பின்னரான தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ தவறிழைத்து விட்டார். இதுவே 2015 ஆம் ஆண்டு தோல்விக்கு பிரதான காரணமாகியது. ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த மக்களின் ஜனநாயகத்தையும் இன நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தியுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற கட்சி சம்மேளனத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

சுதந்திர கட்சியில் யாரும் தனித்து செயற்பட முடியாது. எதிர்காலத்திற்காக நாட்டுக்கான சரியான தீர்மானத்தை எடுப்போம். ஒருபோதும் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையும் எண்ணம் துளி கூட இல்லை. ரணில் விக்கிரமசிங்க தற்போது சஜித் பிரேமதாவுக்கு விட்டுக் கொடுக்கவில்லை. சுதந்திர கட்சி இன்றி யாருக்கும் பயணிக்க முடியாது. வெற்றி பெரும் வேட்பாளரை தெரிவு செய்வது சுதந்திர கட்சி மாத்திரமேயாகும் என்று உறுதியாகக் கூறுகின்றேன். 

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டில் இருக்கின்றோம். ஆனால் பொதுஜன பெரமுன இதனைத் தவறாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஏனைய முக்கிய அமைச்சுக்களை அவர்களே எடுத்துக் கொண்டால் கூட்டணியில் சுதந்திர கட்சி எதற்கு ? இதே நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருந்தால் பயமின்றி எமக்கு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முடியும். 

எனினும் தற்போது சின்னமோ வேட்பாளரோ முக்கியமல்ல. ஐக்கிய தேசி கட்சியை தோல்வியடைச் செய்வதற்கான பொது வேலைத்திட்டமே அவசியமாகின்றது என்றும்  அவர் கூறினார்.