(நா.தனுஜா)

இலங்கையின் கலாசார பாரம்பரியங்கள் உண்மையில் பாராட்டத்தகுந்தவை என்றும், அவற்றுக்கு மிகுந்த மதிப்பளிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்திருக்கிறார். 

அமெரிக்காவின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வந்த அநுராதபுரம் தொல்லியல் திணைக்களம் அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸினால் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது நவீன பாதுகாப்பு வசதிகள் மற்றும் உபகரணங்களுடன் இந்த தொல்லியல் திணைக்களம் மீளவும் செயற்பட ஆரம்பித்திருக்கிறது.

'இனிவரும் எதிர்கால சந்ததியினரும் அனுபவிக்கக்கூடிய வகையில் இலங்கையின் முக்கியத்துவம் மிக்க பாரம்பரிய கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா உதவி வழங்கியிருப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் கலாசாரம் குறித்த எமது பாராட்டையும், மரியாதையையும் வெளிக்காட்டும் அடையாளமாக இந்தத் திணைக்களம் விளங்கும்' என்று அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் கலாசார பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் நிதியுதவியின் கீழேயே அநுராதபுரத்திலுள்ள தொல்லியல் திணைக்களம் மீளப் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.