இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியின் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘இருட்டு’ என்ற திரைப்படம் அடுத்த மாதம் 11ஆம் திகதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் திரையுலகில் ‘முறைமாமன்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. ஏறக்குறைய 24 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இயக்குனராக பணியாற்றி, முப்பதிற்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இன்றும் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.  இவர் தற்போது விஷால் தமன்னா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘ஆக்சன்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

இயக்குனராக மட்டுமில்லாமல் ‘தலைநகரம்’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் நடிக்கத் தொடங்கிய சுந்தர்சி, ஏறக்குறைய 15-க்கும் மேற்பட்ட படங்களில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். சுந்தர்சி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து,இயக்கத்தை மட்டும் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் இயக்குநர் வி இசட் துரை சொன்ன திரில்லர் கதை பிடித்து போனதால், இருட்டு எனப் பெயரிடப்பட்ட அந்த படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

 இயக்குநர் வி. இசட். துரை இதற்கு முன் தல அஜித் நடித்த முகவரி, சீயான் விக்ரம் நடித்த ‘காதல் சடுகுடு’, சிம்பு நடித்த தொட்டிஜெயா. பரத் நடித்த நேபாளி, ஷாம் நடித்த 6,புதுமுக நடிகை அதுல்யா நடித்த ‘ஏமாளி ’ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

சஸ்பென்ஸ் கலந்த ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இருட்டு படத்தில், சுந்தர் சியுடன் நடிகை சாய் தன்ஷிகா, பொலிவுட் நடிகை விமலா ராமன், தயாரிப்பாளரும், கொமடி நடிகருமான விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜி கிரிஷ் இசையமைத்திருக்கிறார்.

‘இருட்டு’ ஒக்டோபர் 11 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி நடிப்பில் இப்படம் வெளியாவதால் அவருடைய ரசிகர்களுக்கு ‘இருட்டு’ ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கும் படமாக இருக்கும் என்கிறார்கள் திரையுலகினர்.