(செ.தேன்மொழி)

குருணாகல் பகுதியில் பிளாஸ்ரிக் துண்டுகளை மாணிக்ககல் என குறிப்பிட்டு விநியோகிக்க முற்பட்ட சந்தேக நபர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்முனாவல பகுதியில் நேற்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

இதன்போது பல வகை நிறங்களிலான பிளாஸ்ரிக் துண்டுகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , கிரிவுள்ள பகுதியில் புதையல் ஒன்றிலிருந்து இந்த கற்களை பெற்றதாகவும் , அங்கு மேலும் இதுபோன்ற கற்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் பொலிஸார் சந்தேக நபரால் தெரிவிக்கப்பட்ட பகுதியை சோதனைக்குட்படுத்திய போது , மேலும் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது தங்க நிறத்திலான் 4 புத்தர் சிலைகளும் , உடைந்திருந்த பித்தளை விளக்கொன்றும் மீட்க்கபட்டுள்ளது.

யட்டிகல்லெழுவ மற்றும் தம்பதெணிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30-52 வயதுக்கு இடைப்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.