இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தனது  இரண்டாவது  பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களை  கடந்தவாரம் நிறைவுசெய்திருந்தார். கடந்த மே மாதம் மீண்டும் பதவியேற்ற பிறகு முதலாவது பதவிக்காலத்தில் தனது அரசாங்கத்தின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் சிறுபான்மையினத்தவர்களை குறிப்பாக, முஸ்லிம்களை அந்நியப்படுத்தியிருந்ததை உணர்ந்துகொண்டவராக கருத்துக்களை வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. சகல சமூகங்களையும்  அரவணைக்கக் கூடியவகையில் அரசாங்கத்தின் வருங்கால செயற்பாடுகள் அமையும் என்ற நம்பிக்கையை  மக்கள் மத்தியில் ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தை அவர் கொண்டிருக்கிறார் என்பது போன்று  அந்த உரைகள் அமைந்திருந்தன. ஆனால், நிலைவரங்களில் எந்த மாற்றத்தையும் காணமுடியவில்லை. இந்து பெரும்பான்மைவாத - வலதுசாரி ஜனவசிய  அரசியல் கொள்கைகளும் செயற்பாடுகளும் மேலும் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதற்கான சமிக்ஞைகளே காண்பிக்கப்படுகின்றன.

மோடி இந்திய அரசியலை ஆக்கிரமித்து நிற்கிறார் என்பது உண்மையே. 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில்  அடுத்தடுத்து நடைபெற்ற இரு பொதுத்தேர்தல்களில் பாராளுமன்றத்தில்  பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி பிரதமராக வந்த முதலாவது அரசியல் தலைவர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியையும்  முழுமையாக தனது ஆதிக்கத்தில் அவர் வைத்திருக்கிறார். ஆளும் கூட்டணியை கடந்த பொதுத்தேர்லில் ஆதரித்த வாக்காளர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் மோடி தலைவராக இல்லாமல் இருந்திருந்தால் வேறொரு கட்சிக்கே தாங்கள் வாக்களித்திருப்பார்கள் என்று கூறியதாக அபிப்பிராய ஆய்வுகள் கூறியிருந்தன. இந்தியாவையும் அதன் பெரும்பான்மைச் சமூகத்தையும் பாதுகாக்கக்கூடிய ஒரே தலைவராக தன்னைக் காண்பித்து தனது ஆதரவாளர்கள்  மத்தியில் தேசியவாத மருட்சியை வளர்க்க அவர் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் குறிப்பாக, பாராளுமன்றத் தேர்தல்களை ஏதோ இந்தியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது போன்ற தோரணையில் அணுகி  தனது  தலைமைத்துவத்தை மையப்படுத்தி பிரசாரங்களை முன்னெடுத்த போக்கை இந்தியாவின் பலகட்சி ஜனநாயகத்துக்கு  அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பவையாக  அவதானிகள் பரவலாக கருதுகிறார்கள்.

வட இந்திய மாநிலமான ஜார்க்காண்டின் தலைநகர் றாஞ்சியில் புதிய சட்டசபைக் கட்டிடத்தை கடந்த வியாழக்கிழமை திறந்துவைத்து உரையாற்றிய பிரதமர் மோடி தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களை வெறுமனே ஒரு ' ட்ரெயிலர் ' ( திரைப்படத்தின் சிறுசிறு பகுதிகளின் மாதிரித்தொகுப்பு ) என்று சுவாரஸ்யமாக வர்ணித்திருந்தார். நாடு கடந்த 100 நாட்களிலும் ' ட்ரெயிலரையே ' பார்த்தது. திரைப்படம் இனிமேல் தான் வெளியிடப்படும். முழுப்படத்தையும் பார்த்துரசிக்க மக்கள் பொறுத்திருக்கவேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அந்த ட்ரெயிலரில் சில முக்கியமான துண்டுகளை நாம் ஒரு தடவை பார்ப்போமே.

மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சியினரும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் மூலமாக பிரத்தியேகமான உரிமைகளை அனுபவிக்கிறது என்று நீண்டகாலமாகவே குமுறிக்கொண்டிருந்தார்கள் ; இந்திய இராணுவத்தின் அடாவடித்தனமல்ல, காஷ்மீரிகள் பெறுகின்ற ' விசேட கவனிப்பே ' அந்த மாநிலத்தில் கிளர்ச்சிகளுக்கு காரணம் என்று கூட அவர்கள் கூறிக்கொண்டார்கள். கடந்த மாதம் அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்துச் செய்யும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய மோடி அரசாங்கம் ஜம்மு - காஷ்மீரின் மாநில அந்தஸ்தை இல்லாமல் செய்து அதை இரு யூனியன் பிரதேசங்களாக துண்டாடியது. காஷ்மீரிகள் வெளியுலகில் இருந்து துண்டிக்கப்பட்டு திறந்தவெளிச் சிறைக்கைதிகளாக்கப்பட்டார்கள். ஜம்மு - காஷ்மீரில் நிலைமை வழமைக்குத் திரும்பிய பிறகு ஒரு கட்டத்தில் மாநில அந்தஸ்தை திருப்பி வழங்குவதாக மோடி கூறியிருக்கிறார் என்ற போதிலும், வழமை நிலைமை திரும்புவது அண்மைய எதிர்காலத்தில் சாத்தியமாகக்கூடிய ஒன்றாக தெரியவில்லை. இமயமலை அடிவாரத்தில் பயங்கரவாதம் மேலும் தழைத்தோங்க வகைசெய்யக்கூடிய ஒரு வரலாற்றுத் தவறை மோடி அரசாங்கம் செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

அடுத்ததாக,  வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் வாழ்ந்துவரும் சுமார் 20 இலட்சம் மக்களை இந்த மாதம்  மோடி அரசாங்கம்" வெளிநாட்டவர்கள் " என்று  பிரகடனம் செய்து அவர்கள்  நாடற்றவர்களாகிப்போகும் ஆபத்தை தோற்றுவித்திருக்கிறது. பாகிஸ்தானில்  இருந்து  கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேஷ் என்ற புதிய சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 1971 மார்ச் மாதத்துக்கு முன்னதாக இந்தியாவுக்குள் வந்தவர்கள் என்பதை அந்த மக்களால் ( அவர்களின் குடியுரிமை அந்தஸ்து குறித்து ஆராய நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு நீதிமன்றத்தின் முன்பாக ) நிரூபிக்கமுடியாமல் போனதே அதற்கு காரணமாகும். அந்த விசேட நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இரண்டகமானவை என்று சர்வதேச மன்னிப்புச்சபை குறைகூறியிருக்கிறது. வங்காள விரிகுடாவிற்குள் தூக்கிவீசப்படவேண்டிய  " ஊடுருவல்காரர்கள் " என்றும் " கறையான்கள் " என்றும் மோடியின் வலதுகரமான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவினால்  வர்ணிக்கப்பட்ட  அந்த  மக்களில் பலர் முஸ்லிம்கள் என்றும் கூறப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, முதலாவது பதவிக்காலத்திலும் பல தடவைகள் இந்தி   பேசாத மாநிலங்களில் அந்த மொழியைத் திணிப்பதற்கு முயற்சிகளை சூட்சுமமான முறையில் மேற்கொண்ட  மோடி அரசாங்கம் தொடர்ந்தும் இந்தித் திணிப்பில் முனைப்புக்காட்டிய வண்ணமே இருக்கிறது. வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் இந்தி மொழியை பிற மாநிலங்களில் திணிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதும் எதிர்ப்புக் கிளம்பியதும் எதையாவது கூறி அதை தணிப்பதற்கு முயற்சிப்பதும் மோடி அரசாங்கத்தின் வழக்கமாகிவிட்டது. 

நேற்று முன்தினம் சனிக்கிழமை ( 14/9 ) இந்தி தினமாகும். அதாவது இந்திய அரசியல் நிருணயசபை இந்தியை உத்தியோகபூர்வமொழி அந்தஸ்தை 1949 ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் திகதி வழங்கியதால் அன்றைய தினம் இந்தி தினமாக 1953 ஆம் ஆண்டில் இருந்து அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது. அதை முன்னிட்டு சனிக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட கருத்து இந்தி பேசாத மாநிலங்களில் குறிப்பாக தென் மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியை இந்தியாவின்  ' பொதுமொழி ' யாகவும் உலகளாவிய ரீதியில் இந்தியாவை அடையாளப்படுத்தும் மொழியாகவும் மாற்றவேண்டும் என்று அவர் டுவிட்டரில் பதிவுசெய்தார். ' இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழியும் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது. ஆனால், முழு நாட்டுக்குமாக ஒரு மொழியைக் கொண்டிருக்கவேண்டியது முக்கியமானதாகும். அந்த மொழியே உலகில் இந்தியாவின் அடையாளமாக வரவேண்டும். இந்திய மக்களை அவ்வாறு ஒன்றிணைக்கக்கூடிய மொழி என்றால் அது இந்தியாகவே இருக்கமுடியும். 1924 பொதுத்தேர்தலுக்கு நாம் தயாராகும்போது இந்தி பெரும் சிறப்புக்குரிய அந்தஸ்தை அடைந்திருக்கவேண்டும். இது மகாத்மா  காந்தியினதும் சர்தார் வல்லபாய் பட்டேலினதும் கனவை நனவாக்குவதாக இருக்கும். ஒவ்வொரு இந்தியப் பிரஜயும் தனது சொந்த மொழியுடன் இந்தியைப் பயன்படுத்துவதையும் அதிகரிக்கவேண்டும்' என்று ஷா கூறியிருக்கிறார்.

அவரின் இந்த  ' இந்தி திணிப்பு ' கருத்துக்கு எதிராக தென்மாநிலங்களில் கிளம்பிய எதிர்ப்பு பற்றியதாகவே நேற்றைய தினம் பெரும்பாலான இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்தி அமைந்திருந்தது. அண்மைக்காலமாக மோடி அரசாங்கம் ' ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை ' என்று பேசிவருகிறது. அதன் தொடர்ச்சியாக ' ஒரே நாடு ஒரே மொழி ' என்ற கோஷத்தையும் முன்னிலைப்படுத்துவதன் மூலமாக ஒற்றைக் கட்டமைப்பை வலிந்து திணிக்க முயற்சிக்கிறது. இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பாரதூரமான சவாலாக அமைகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பை அழிக்கும் முயற்சிகளில் மோடி அரசாங்கம் கங்கணம் கட்டி நிற்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. மதசார்பின்மை போன்ற இந்திய அரசியலமைப்பின் அச்சாணிக் கோட்பாடுகளைச் சிதைத்து  ' இனத்துவ ஜனநாயகமாக ' ( Ethnic Democracy) இந்தியா மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

இது இவ்வாறிருக்க, ஜம்மு - காஷ்மீருக்கு இதுகாலவரை இருந்து வந்த விசேட அந்தஸ்தை நீக்கி, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக தரங்குறைத்த மோடி அரசாங்கத்தின் நடவடிக்கை அயல் நாடுகளிலும் குறிப்பாக இலங்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்டுத்தியிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ' கேசரிக்கு ' நேர்காணலொன்றை வழங்கியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப்பரவலாக்கல் மூலமான அரசியல் தீர்வு குறித்து கருத்து தெரிவித்தபோது ' அண்மையில் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளையும் கருத்திற்கொள்வேண்டியிருக்கிறது ' என்று குறிப்பிட்டிருந்தார். மோடி அரசாங்கம் அந்த மாநிலத்துக்கு இருந்த அந்தஸ்தை குறைத்து அதை யூனியன் பிரதேசமாக்கியதன் மூலமாக அதிகாரப்பரவலாக்க கோட்பாடுகளுக்கு எதிர்மறையாகவே நடந்திருக்கிறது. அதில் எதை கருத்தில் எடுக்க எமது முன்னாள் ஜனாதிபதி விரும்புகிறாரோ தெரியவில்லை. 

இவ்வாறாக மோடி அரசாங்கத்தின் 100 நாள் ட்ரெயிலரின் இலட்சணம் அமைந்திருக்கிறது. அப்படியானால், முழுத் திரைப்படமும் எப்படியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

வீ.தனபாலசிங்கம்