உலக கிண்ண கூடைப் பந்துப் போட்டியில் ஆர்ஜெண்டீனாவை ஸ்பெய்ன் வீழ்த்தி, இரண்டாவது முறையாகவும் சம்பியன் ஆகியுள்ளது.

18 ஆவது உலக கிண்ண கூடைப்பந்து போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின்-அவுஸ்த்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

திரில்லிங்காக நகர்ந்த இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் இரு அணிகளும் தலா 71 ரன்கள் எடுத்து சமநிலை வகித்தன. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதலாக 5 நிமிடம் வழங்கப்பட்டது. 

இதில் அபாரமாக விளையாடி ஸ்பெயின் அணி 95-88 என்ற புள்ளி கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனா-பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே குறைந்த புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்த ஆர்ஜெண்டீனா அணி முடிவில் 80-66 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது.

இந் நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீஜிங்கில் நேற்று நடந்த இறுதி போட்டியில், இரு அணி வீரர்களும் மாறி மாறிப் புள்ளிகளை குவித்தனர். 

ஸ்பெய்ன் வீரரான ரிக்கி ரூபியோ 20 புள்ளிகளை அணிக்கு பெற்றுக் கொடுத்தார். முடிவில் 95 க்கு 75 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த உலக கிண்ண போட்டியில் முதல் 2 இடங்களை பிடித்த ஸ்பெய்ன் மற்றும் ஆர்ஜெண்டீனா உட்பட 8 அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு இதன் மூலம் தகுதி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.