சவுதி அரேபியாவில் எரிபொருள் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 50 சதவீத எண்ணெய் உற்பத்தியை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் இருந்து 330 கி.மீ. தொலைவில் புக்யாக் என்ற இடத்தில் உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயலையும் குறிவைத்து நேற்று முன்தினம் ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதனால் அங்கு தீப்பிடித்து எரிந்தது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்தாலும், சுமார் 50 லட்சம் பீப்பாய் எண்ணெய் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதலுக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்றனர்.

இந்த நிலையில், ஆளில்லா விமான தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்திருப்பதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்தது. 

இது குறித்து இளவரசரும், அந்நாட்டின் எரிசக்தி துறை மந்திரியுமான அப்துல் அஜீஸ் பின் சல்மான் கூறியதாவது:-

ஏமன் கிளர்ச்சிப்படையினரின் தாக்குதலால் அராம்கோவின் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய எண்ணெய் ஆலைகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவிட்டோம். இதனால் சவுதியில் ஏறக்குறைய 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 57 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய் சவுதி அரேபியாவில் உற்பத்தியாகும் நிலையில், அங்கு நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலும், அதன் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி குறைப்பும் எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விலை உயர்வு என்னும் அபாயத்துக்கு வழி நடத்தி விடும்.