இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் தனது தலையை சிதறடித்துவிடலாம் என நினைத்தார் என ஆசஸ் டெஸ்ட் தொடரின் இறுதி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் சார்பில் சதம்பெற்ற மத்தியு வேட் தெரிவித்துள்ளார்.

ஜொவ்ரா ஆர்ச்சர்  எனது தலையை சிதறடித்துவிடலாம் என நினைத்து பந்துவீசினார் ஆனால் அவரது பந்துவீச்சினை  எதிர்கொள்ளமுடியும் என நான் உணர்ந்து விளையாடினேன் என அவுஸ்திரேலிய அணிக்காக இரண்டாவது இனிங்சில் சதமடித்த மத்தியு வேட் தெரிவித்துள்ளார்.

ஆசஸ் தொடரின் இறுதி டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது இனிங்சில் ஆர்ச்சருக்கும் மத்தியுவேட்டிற்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

ஆர்ச்சர் சளைக்காமல் வேகத்தில் குறைவின்றி பந்து வீசியதுடன் துடுப்பாட்ட வீரர்களை தாக்கினார்.

ஆர்ச்சர் ஒரு கட்டத்தில் களைப்படைந்து வேகத்தை குறைப்பார் என நினைத்தோம் ஆனால் அவர் தொடர்ந்து  எங்களை தாக்கும் விதத்தில் பந்து வீசினார் என வேட் தெரிவித்துள்ளார்.

அது சிறந்த மோதலாக காணப்பட்டது சிறிதளவு வார்த்தை பிரயோகங்களும் இடம்பெற்றன ஆனால் சிறந்த கடுமையான டெஸ்டாக இது காணப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசஸ் தொடரில் விளையாடுவதற்காக வந்தவேளை நான் இதனையே எதிர்பார்த்தேன் இதற்கு முன்னர் நான் ஆசஸ் தொடரில் விளையாடியது இல்லை,எனவும் மத்தியுவேட் தெரிவித்துள்ளார்.

ஜொவ்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்குள் உள்வாங்கப்பட்ட விதத்தினை அவதானித்தவேளை அவரிடம் வித்தியாசமான திறமையுள்ளமை தெரிந்ததுஎனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது குறிப்பாக ஆசஸ் தொடர் என்பது இதுதான் நீங்கள் மோதலிற்கு தயாராகயிருக்கவேண்டும்,என குறிப்பிட்டுள்ள மத்தியு வேட் ஆர்ச்சர் தனது தோளை தாக்கினார் எனவும்  சிறிய காயம் ஏற்பட்டது எனவும் எனினும் தான் அதனை காண்பிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நான் தோளில் சிறியளவில் அடிபட்டதை வெளிப்படுத்தினால் ஆர்ச்சர் மீண்டும் அதே விதத்தில் பந்தை வீசுவார் என்புத எனக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.