தியாக தீபம் திலீபனின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

பொதுச் சுடரினை மாவீரர் தேவானந்தனின் தாயார் ஏற்றிவைக்க, தியாகி திலீபனின் உருவப் படத்துக்கான தியாகச் சுடரை மாவீரர் சஞ்சீவனின் சகோதரன் ஏற்றி வைத்தார்.

பொது மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி ஆரம்ப நாள் நினைவேந்தலைக் கடைப்பிடித்தனர்.

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக, உணவு ஒறுப்பு போராட்டத்தை இராசையா பார்தீபன் என்ற இயற் பெயர் கொண்ட திலீபன் முன்னெடுத்திருந்தார். 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமான போராட்டம் 12 நாட்கள் நடைபெற்று செப்ரெம்பர் 26 ஆம் திகதி, திலீபனின் வீரச்சாவுடன் நிறைவுக்கு வந்திருந்தது.

12 தினங்களும் நீராகாரம் எதுவுமின்றி திலீபன் போராட்டம் நடத்தியிருந்தார்.

தியாக தீபத்தின் நினைவேந்தல் இன்று தொடக்கம் 12 நாட்களுக்கு தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.