தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

நடிகை நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பிகில்’ படத்திலும், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சுப்பர் ஸ்டார் நடிக்கும் ‘தர்பார்’ படத்திலும், விஜய் சேதுபதி நடிக்கும் தெலுங்கு படமான ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடித்து முன்னணி நடிகையாகவேயிருக்கிறார். 

இந்நிலையில் இவர் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படத்திற்கு நெற்றிக்கண் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை நயன்தாராவின் காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தொடங்கியிருக்கும் புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். இதனை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சித்தார்த் நடிப்பில் வெளியான அவள் என்ற படத்தை இயக்கி வெற்றிக்கண்டவர். இவரது இயக்கத்தில் உருவாகும் புதிய திரில்லர் படமிது.

இது குறித்து அவர் பேசுகையில்,“இந்த படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நெற்றிக்கண் என்று பெயரிட்டோம். ஆனால் அந்த படத்தின் தலைப்பு தயாரிப்பு புஷ்பா கந்தசுவாமி அவர்களிடம் இருந்தது. அவர்களை சந்தித்து, தடையில்லா சான்றிதழ் கேட்டபோது, மறுக்காமல் கொடுத்து உதவினார். இந்த படத்தின் டீஸர் வெளியாகும் போது இந்த தலைப்பிற்கான பொருத்தத்தை ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்.இந்த படத்தின் படபிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது.” என்றார்.