இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான முதலாவது சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. 

அதன்படி முதலாவதாக ஆரம்பமாகவுள்ள இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.

கடந்த மாதம் மேற்கிந்தியத்தீவுகளுடன்  நடந்த இருபதுக்கு - 20 தொடரில், இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்களே இந்த தொடரிலும் நீடிக்கிறார்கள். 

வலுவான இந்திய அணியின் நடுத்தர வரிசலையில் மணிஷ் பாண்டே அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

சுழற்பந்து வீச்சாளர்களில் ஜடேஜா அல்லது ராகுல் சாஹர், குருணல் பாண்டியா, வோசிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறுவார்கள். சலகதுறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியுள்ளது பலம் சேர்க்கும். 

வேகப்பந்து வீச்சாளர்கள், பும்ரா, புவனேஷ்வர்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணி, புதிய தலைவராக குயின்டான் டி காக் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியின் டேவிட் மில்லர், வான்டெர் டூஸன் ஆகியோர் அதிரடியில் மிரட்டுவார்கள்.  பந்துவீச்சில் ரபாடா, பெலக்வாயோ, ஜூனியர் டாலா அச்சுறுத்தக் கூடியவர்கள். 

தொடர்ச்சியாக நான்கு இருபதுக்கு - 20 தொடர்களை கைப்பற்றியுள்ள தென்னாப்பிரிக்க அணி, அதே உற்சாகத்தோடு களமிறங்கும் என்பதால் இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும்.

இரு அணிகளும் இதுவரை இருபதுக்கு - 20 போட்டியில் 13 முறை மோதியுள்ளன. இதில் 8 இல் இந்தியாவும், 5 இல் தென்னாப்பிரிக்காவும் வெற்றிபெற்றுள்ளன.

தர்மசாலாவில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.