அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 382 ஓட்ட முன்னிலையில் உள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகளை கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரில் அவுஸ்திரேலிய அணி, 2-க்கு 1 என முன்னிலை பெற்றுள்ளது. 

இந் நிலையில் இவ் விரு அணிகளுக்கு இடையிலான இறுதி டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமானது. 

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, அவுஸ்திரேலிய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 8 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஜோஸ் பட்லர் 64 ஓட்டத்துடனும் ஜேக் லீச் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இதன் பின்னர் 271 ஓட்டத்துடன் இரண்டம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 294 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் மார்ஷ் 5 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணியை இங்கிலந்து அணியினர் பந்து வீச்சில் மிரட்டினார், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சர். அவரது வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாத அந்த அணி, 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் (5 ரன்கள்), ஹாரிஸ் (3), லபுஸ்சாக்னே (48), மார்ஷ் (17), சிடில் (18), லியான் (25) ஆகியோரின் விக்கெட்டுகளை ஆர்ச்சர் வீழ்த்தினார். 

எனினும் இப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் கடுமையாக போராடி 80 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஏனைய வீரர்கள் எவரம் நிலைத்து நிற்கவில்லை.

69 ஓட்ட முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2 ஆவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

இந்த நிலையில் 3 ஆவது நாளான நேற்று இங்கிலாந்து வீரர்கள் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினர். ரோரி பேர்ன்ஸ் 20 ஓட்டத்துடனும், ஜோ ரூட் 21 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் ஜோ டென்லியுடன், பென் ஸ்டோக்ஸ் கூட்டணி அமைத்தார். 

இருவரும் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுவான நிலையை நோக்கி கொண்டு சேர்த்தனர்.  அணியின் ஓட்ட எண்ணிக்கை 214 ஆக உயர்ந்த போது பென் ஸ்டோக்ஸ் 67 ஓட்டத்துடன் நெதன் லியோனின் சுழலில் போல்டு ஆனார். 

மறுமுனையில் இரண்டு முறை கண்டம் தப்பி தனது ‘கன்னி’ சதத்தை நெருங்கிய ஜோ டென்லி 94 ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பெயர்ஸ்டோ 14 ஓட்டத்துடனும், சாம் குர்ரன் 17 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 6 ஓட்டத்துடனம், ஜோஸ் பட்லர் 47 ஓட்டத்துடனும் வெளியேறினர்.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 ஆவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 313 ஓட்டங்களை சேர்த்து மொத்தம் 382 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

இன்று நான்காம் நாள் ஆட்டமாகும்.