(எஸ்.வினோத்)

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இல­குவில் வெற்­றி­கொள்ள கூடி­ய­வரும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பெரும்­பா­லான கட்­சிகளின் ஆத­ரவை பெற்­ற­வ­ரு­மான சஜித் பிரே­ம­தா­ஸவை இவ்­வா­ரத்­துக்குள் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அறி­விப்பார் என்றும்  சஜித்தை கள­மி­றக்­கு­வ­தற்கு பிர­தமர் மறை­மு­க­மான இணக்­கத்தை தெரி­வித்­துள்­ள­தா­கவும் பிரதி அமைச்சர் நளின் பண்­டார தெரி­வித்­துள்ளார்.

 இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் பிளவு ஏற்­பட்­டுள்­ள­தாக எதிர்க்­கட்­சி­யினர் பிர­சாரம் செய்து வரு­கின்­றனர். அவ்­வாறு எந்­த­வொரு பிளவும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்குள் கிடை­யாது. கட்­சியில் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு நிலைப்­பாடு உள்­ளது.

அதையே அவர்கள் வெளிப்­ப­டை­யாக தெரி­வித்து வரு­கின்­றனர். அதை கட்­சியின் பிளவு என அர்த்­தப்­ப­டுத்­திக்­கொள்ளக் கூடாது. எவ்­வாறு இருப்­பினும் கட்­சியின் இறுதித் தீர்­மா­னத்­திற்கு உடன்­பட்டு உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வார்கள்.

சஜித் பிரே­ம­தா­ஸவை  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்க, ரணில் விக்­கி­ர­ம­சிங்க இடம் கொடுக்க மாட்டார் என பேசு­கின்­றனர். ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வ­ருக்கோ அல்­லது அதன் உறுப்­பி­னர்­க­ளுக்கோ கட்­சியை தோல்வி நோக்கி கொண்டு செல்லும் எண்ணம் கிடை­யாது. அவர்­க­ளுக்கும் கட்­சியை வெற்­றிப்­பெற செய்­யவே வேண்டும் எனவே கையில் உள்ள வெற்­றியை தவ­ற­விட அவர்கள் விரும்­ப­மாட்­டார்கள்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்க மாட்டார் அதை என்னால் உறு­தி­யாக கூற முடியும். அவர் 2010 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் அந்த முடிவை எடுக்­க­வில்லை. இம்­முறை தேர்­தலில் சஜித்தை கள­மி­றக்கி இல­கு­வான வெற்­றியை பெறு­வ­தற்கு வழி­ய­மைத்­துக்­கொ­டுப்பார்.

அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்தை சுமு­க­மான முறையில் முடி­வ­டைந்­துள்­ளது. அந்த பேச்­சு­வார்த்­தையின் போது எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றிப்­பெ­று­வ­தற்­கான வியூ­கங்கள் குறித்து பிர­தமர் சஜித்­திற்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளார். சஜித்தை கள­மி­றக்­கு­வ­தற்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்­சி­களின் இணக்­கப்­பாட்­டையும் பிர­தமர் எதிர்­பார்க்­கின்றார் .அதனால்  அவர்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்­கத்தை பெறு­மாறு சஜித்தை  அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

இதை அடிப்­ப­டை­யாக கொண்டு நோக்கும் போது சஜித்தை கள­மி­றக்க பிர­தமர் மன­த­ளவில் இணங்­கி­யுள்­ளமை புல­னா­கின்­றது. இதை அவர் மறை­மு­க­மாக வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். 

பிர­த­மரின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய, எதிர்வரும் நாட்களில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் இணக்கப்பாட்டை பெற்றுக்கொண்டதன் பின்னர் இவ்வாரத்துக்குள் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக பிரதமர் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.