எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் எனது சாதனைகள் குறித்து நான் திருப்தியடையவில்லை என அஞ்சலோ மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உங்களது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் உங்களது சாதனைகள் குறித்து நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா என்ற கேள்விக்கு மத்தியுஸ் நேர்மையாக பதில் அளிப்பது என்றால் நான் திருப்தியடையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

நான் என்னால் முடிந்ததை விட குறைவாகவே சாதித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

2013 முதல் 2016 வரை நான் அதிகளவு போட்டிகளில் விளையாடினேன் அது எனது உடலிற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது  என குறிப்பிட்டுள்ள மத்தியுஸ் நான் காயங்கள் காரணமாக பாதிக்கப்பட்டேன் 2016 முதல் 2018 வரை அணியில் முழுமையாக இடம்பெற என்னால் முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் காயங்களால் பாதிக்கப்படாமல் தொடர்ச்சியாக விளையாடியிருந்தால் அதுவேறுகதையாக விளங்கியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்து அணிக்கு எதிரான ரி20 அணியிலிருந்து நீக்கப்பட்டமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள அஞ்சலோ மத்தியுஸ் அவர்கள் என்னை நீக்கவேண்டும் என விரும்பினால் தெரிவுக்குழுவினரின்  சிந்தனையை என்னால் மாற்ற முடியாது ,அவர்களே அதனை முடிவு செய்தனர்  நான் விளையாடுவதற்கே எண்ணியிருந்தேன்  நான் சிறப்பான நிலையிலிருந்தேன் எனவும்குறிப்பிட்டுள்ளார்.

தனது உடற்தகுதி குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து பதிலளித்துள்ள மத்தியுஸ்  இந்த விமர்சனங்களை முன்வைக்குமாறு யார் கேட்டுக்கொண்டனர் என நீங்கள் கிரஹாம் லபரோயிடமும் சண்டிக ஹதுருசிங்கவிடமும் கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அது என்மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல் என நான் கருதினேன் என் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவரை உடற்தகுதி அடிப்படையில் நீக்குவதற்கு முன்னர்  அந்த வீரரை உடற்தகுதி பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்,ஆசிய கிண்ணத்திற்கு முன்னர் நான் சகல உடற்தகுதி பரிசோதனைகளிலும் தேறியிருந்தேன் எனவும் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

என்னை நீக்கிய பின்னரும் நான் உடற்பரிசோதனைக்கு அழைப்பு விடுத்தேன் ஆனால் அவர்கள் என்னை செவிமடுக்கவில்லை,என குறிப்பிட்டுள்ள அஞ்சலோ மத்தியுஸ்  உலககிண்ண தொடரிற்கு முன்னர் சண்டிகஹதுருசிங்க மன்னிப்பு கோரினார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.