ஆசஸ் தொடரில் விளையாடும் அவுஸ்திரேலிய அணி வீரர்களின் வாய்களில் இருந்து பெருமளவு குப்பை வெளியேறுவதாக கடும் கண்டனம் வெளியிட்டுள்ள முன்னாள் அவுஸ்திரேலிய ஜாம்பவான் இயன் சப்பல் அவுஸ்திரேலிய அணியினரை வாய்களை மூடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆசஸ் தொடரின் இறுதிடெஸ்டின் மூன்றாவது நாளான நேற்று இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய வேளை களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள் தொடர்ச்சியாக வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து நடுவர்கள் தலையிடவேண்டிய நிலையேற்பட்டது.

அவுஸ்திரேலிய வீரர் மத்தியு வேட் குறிப்பாக இங்கிலாந்து துடுப்பாட்டவீரர்களை நோக்கி உரையாடிக்கொண்டிருந்ததை காணமுடிந்தது.

இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் துடுப்பெடுத்தாட களத்தில் நுழைந்ததும் மத்தியுவேட் அவரிடம் எதனையோ தெரிவித்ததையும் அதற்கு ருட் பதிலளித்தையும் காணமுடிந்தது.

இதனை தொடர்ந்து எக்டிரா கவர் திசையில் களத்தடுப்பில் நின்ற மத்தியுவேட்டினை நோக்கி சென்ற நடுவர் குமார்தர்மசேன வேட்டினை அவரது வார்த்தை பிரயோகங்களை குறைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தர்மசேன ஜோ ரூட்டுடன் உரையாடியதையும் அவதானிக்க முடிந்தது.

இதன் பின்னர் தேநீர் இடைவேளையின் போது நடுவர்கள் இரு அணித்தலைவர்களுடனும் உரையாடியதை அவதானிக்க முடிந்தது.

எனினும் ஜோ ரூட் ஆட்டமிழந்து பென்ஸ்டோக்ஸ் ஆடுகளத்திற்குள் நுழைந்தவேளை மீண்டும் இரு அணிவீரர்களும் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டனர்.

பென்ஸ்டோக்ஸ் தனக்கு அருகில் களத்தடுப்பில் ஈடுபட்ட அவுஸ்திரேலிய வீரர்களுடன் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டார்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய அணித்தலைவர் டிம்பெயின் நடுவர்கள் தன்னிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை ஜோரூட்டும் மத்தியுவேட்டும் சாதாரணமாக உரையாடினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பென்ஸ்டோக்ஸ் டேவிட் வோர்னரை நோக்கி தகாத வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டார் என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளை டிம்பெயின் பென்ஸ்டோக்ஸ் பிரிஸ்டலில் ஹோட்டல் மோதலில் ஈடுபட்டதை நினைவுபடுத்தும் விதத்தில் பிரிஸ்டல் என அழைத்துள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயன் சப்பல் நடுவர்கள் தலையிடவேண்டிய தருணம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

துடுப்பாட்டவீரர்கள் அமைதியாக துடுப்பெடுத்தாடுவதற்கான உரிமையுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் அதிகளவு குப்பைகளை செவிமடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.