அல்ஹய்தா தலைவர் ஒசாமா பின் லாடனின் மகன் ஹம்சா பின் லாடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டுவிட்டதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் எல்லையில் அமெரிக்கா மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது ஹம்சா பின் லாடன் கொல்லப்பட்டார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் ஹம்சா பின் லாடனை கொல்வதற்காக முன்எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தோ அவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது குறித்தோ  டிரம்ப் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ஹம்சா லாடன் கொல்லப்பட்டுள்ளதால்  தலைமைத்துவ திறமை கொண்ட ஒருவரை அல்ஹைடா இழந்துள்ளது என குறிப்பிட்டுள்ள டிரம்ப் ஹம்சாவின் தந்தையுடன் அல்ஹைதா உறவிற்கு காணப்பட்ட உணர்வுபூர்வமான தொடர்பும் பறிபோயுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

ஹம்சா கொல்லப்பட்டுள்ளதால் அல்ஹைதா அமைப்பின் நடவடிக்கை திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்சா பின் லாடன்  பல பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புகளை பேணிவந்தார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யூலை மாத இறுதியில் ஹம்சா பின் லாடன் கொல்லப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.