எம்மில் பலர் தலைவலியால் பாதிக்கப்படுவதுண்டு. அதிலும் குறிப்பாக ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுவதுண்டு. அதன்போது பெரும்பாலானவர்கள் உடனடி நிவாரணத்தை விரும்பி, சாதாரண தலைவலிக்கான வலி நிவாரணிகளை பயன்படுத்துகிறார்கள். இது ஆபத்தான பின் விளைவை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

இன்றைய திகதியில் உலக மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்தினர் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. தெற்காசியா முழுவதும் 20 கோடி பேர் இத்தகைய ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், ஆண்களை காட்டிலும் பெண்கள் தான் ஒற்றை தலைவலியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதிலும் குறிப்பாக 35 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இத்தகைய பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.

ஒற்றை தலைவலியை மருத்துவத் துறையினர்  Hemiplegic Migraine. Ophthalmoplegic Migraaine, Facioplegic Migraine என பல வகை உண்டு என்று தெரிவிக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை பூப்பெய்தும் காலம், மாதவிடாய் வரும் காலகட்டம், மாதவிடாய் நிற்கும் தருணம், கருத்தடைக்காக ஹோர்மோன் மாத்திரைகள் சாப்பிடும் தருணத்திலும் ஒற்றைத் தலைவலி வரக்கூடும். 

ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் நான்கு மணித்தியாலம் முதல் நான்கு நாட்கள் வரை நீடிக்கும். இதற்கு ஏராளமான அறிகுறிகள் உண்டு. இதில் சிலருக்கு தற்காலிகமாக பேசுவதில் தடை ஏற்படும். கைகால்களில் துடிப்பு ஏற்படலாம். வாந்தி அல்லது குமட்டல் உணர்வு கூட ஏற்படக்கூடும்.

பணிச்சுமை, மன குழப்பம், மன அழுத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலி வருவதற்கான பிரதான காரணம் என்றாலும், உடலில் இயல்பாக இருக்க வேண்டிய வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள், மலச்சிக்கல், சாப்பிடும் உணவில் உப்பு புளி காரம் ஆகியவை சம அளவில் இல்லாதிருப்பது, உடலில் ஏற்பட்டிருக்கும் ஏனைய பாதிப்புக்கு மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் வலிநிவாரணி மாத்திரைகளை சாப்பிடுவது, இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பது என பல காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

சாதாரண தலைவலிக்கும், ஒற்றை தலை வலிக்கும் உள்ள நுட்பமான வேறுபாட்டை நோயாளிகள் புரிந்துக் கொண்டு, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வது தான் சரியானது. பெரும்பாலான தருணங்களில் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால் ஒற்றை தலைவலியிலிருந்து முழுமையான நிவாரணம் கிடைக்கும். உறக்கத்தையும், உறக்கத்தின் தன்மையையும் முறைப்படுத்திக் கொண்டாலும் ஒற்றை தலைவலியிலிருந்து முழுமையாக விடுபடலாம்.

டொக்டர் கோடீஸ்வரன்.

தொகுப்பு அனுஷா.