சவுதிஅரேபியாவின் முக்கியமான எண்ணெய் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

யேமனின் ஹெளதி கிளர்ச்சிக்காரர்களின் பேச்சாளர் ஒருவர் தாக்குதலிற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஹெளதி கிளர்ச்சிக்குழுவினர் தமது அல்மசீரா ஊடகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அப்கேயக் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை மீதும் குரைஸ் எண்ணெய் வயல்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு 10 ஆளில்லா விமானங்களை அனுப்பியதாக யேமனின் கிளர்ச்சிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யேமனில் தாக்குதல்கள்  தொடர்ந்தால் சவுதிஅரேபியா மீது தாக்குதல்கள் தீவிரமடையலாம் என ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தவிர்ப்பதற்கு சவுதி அரேபிய அரசாங்கம் எங்களை தாக்காமலிருப்பதே ஒரே வழி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அப்கெயக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டவேளை எடுக்கப்பட்ட வீடியோக்களில் பின்னணியில் துப்பாக்கி சத்தத்தை கேட்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரம்கோவின் மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அப்குவைக்கில் முதல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

ஆளில்லா விமானதாக்குதல்களை தொடர்ந்து தொழிற்சாலையிலிருந்து பாரிய தீப்பிழம்புகளும் கரும் புகை மண்டலமும் வெளியாவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை செய்திகள் வெளியாகாத அதேவேளை இந்த தாக்குதல் காரணமாக மத்தியகிழக்கில் பதற்ற நிலை மேலும் தீவிரமடையும் ஆபத்து உருவாகியுள்ளது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

யேமன் கிளர்ச்சியாளர்களிற்கு ஈரான் மறைமுக ஆதரவை வழங்கிவருவதும் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி அவர்களிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.