நெடுங்கேணி வெடுக்குநாரி  மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமானது என தெரிவித்து ஆலயத்தில் பொதுமக்கள் வழிபடுவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் முயற்சியால் வழிபடுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதுடன் ஆலயவளாகத்தில் கட்டுமானங்களை ஏற்படுத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமாகிய வருடாந்த பொங்கல் விழா தொடர்ச்சியாக 9 நாட்கள் நடைபெற்று இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஒலு மடு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காவடிகள் வந்திருந்தன.

இந்நிலையில் நேற்று இரவு மடப்பண்டம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்று இன்று அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்னர் பொங்கல் பொங்கி நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது. 

நேற்றைய இறுதி நாள் நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள், மற்றும் யாழ்பல்கலைகழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

இதேவேளை ஆலயத்தின் உச்சிப்பகுதிக்கு செல்வதற்கான படிக்கட்டுகள் இரும்பினால் அமைக்கபட்ட நிலையில் அதனை மலையில் பொருத்துவதற்கு பொலிசார் மற்றும் தொல்பொருட்திணைக்களத்தினால் அனுமதி மறுக்கபட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுமுந்தினம் இரவு அப்பகுதி மக்களால் குறித்த ஏணிபடிக்கட்டுகள் மலையில் பொருத்தபட்டது. ஆலயத்திற்கு சிவில் உடையில் வருகை தந்திருந்த நெடுங்கேணி பொலிசார் ஏணிப்படிக்கட்டுகள் பொருத்துவதற்கு அனுமதி அளித்தது யார் என ஆலயத்தின் நிர்வாகத்தினரிடம் விசாரித்ததுடன் திருவிழா நிறைவு பெற்ற பின்னர் இன்றையதினம் ஏணிபட்படிக்கட்டுகளை அகற்ற வேண்டும் என தெரிவித்துவித்துடன் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் கூறிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் படிக்கட்டுகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கபட வேண்டும் என கடந்த முறை இடம்பெற்ற வவுனியா  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானிக்க பட்டிருந்தது. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் தடை ஏற்படுத்துகிறீர்கள் என பொலிசாரிடம் ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்ததுடன் ஒருங்கிணைப்பு குழுவின் முடிவும் பொய்த்து போய்விட்டதா என விசனம் தெரிவித்திருந்தனர்.