தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக இலங்கை வந்துள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீன், இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்த முக்கியஸ்தர்களுடன் சினேகபூர்வ சந்திப்பொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில்  நேற்று (13.09.2019) கொழும்பு ரமதா ஹோட்டலில் இடம் பெற்றது.

 “இலங்கை இந்திய உறவுகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் கருத்தாடலும்”  எனும் தலைப்பில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள அரசியல், சிவில் சமூக மற்றும் ஊடகத்துறைசார் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்திய நாட்டு அரசியல் பிரமுகர்கள் இதன் போது பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில், முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவருமான பேராசிரியர் காதர் மொஹிதீன் விஷேட அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அமைச்சர்களான றிசாத் பதியுதீன்,மனோகனேசன் மற்றும் இராஜாங்க அமைச்சர்களான பைசல்காசீம், அமீர் அலி ,பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீஸ்,முஜிபுர் ரஹ்மான்,பௌசி,பைசர் முஸ்தபா,நசீர் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்நிகழ்வில், சிறப்பு கௌரவ அதிதிகளாக IUML -  மலப்புரம் மாவட்ட தலைவர் சாதிக் அலி தங்கல், இந்திய பாராளுமன்ற  உறுப்பினர்களான ஈ.ரீ. முஹம்மத் பஷீர், பீ.வீ. அப்துல் வஹ்ஹாப், கே. நவாஸ்கனி, முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்ர், முன்னாள் பாராளுமன்ற (லோக் சபா) உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினரும் தமிழ் நாடு வக்பு சபை உறுப்பினர்ருமான பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரதி செயலாளர் ஆளுர் ஷா நவாஸ், எஃபிசன்ட் ட்ரேடின் ஏஜன்ஸி தனியார் கம்பனியின் தலைவர் சதக் அப்துல் காதர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மஹ்பூப், மணிச்சுடர் தமிழ் தினசரி ஊடகவியலாளர் திருச்சி சாஹுல் ஹமீத் ஆகியோரும் மேலும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.