அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், இரண்டு தசாப்தங்களுக்கு முன் நீரில் மூழ்கிய காரில் பயணம் செய்து இறந்தவரின் உடல் எச்சங்களை கூகுள் மேப் செயலி கண்டறிய உதவியுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் திகதியன்று புளோரிடாவின் லான்டனாவில் வில்லியம் மோல்ட் என்ற இந்நபர் காணாமல் போனார்.

அந்த காலகட்டத்தில் 40 வயதான இவர், ஓர் இரவு விடுதிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

வில்லியம் காணவில்லை என பொலிஸில் புகார் செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது. ஆனால், அதற்கு பிறகு இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு (2019) ஆகஸ்ட் 28ஆம் திகதியன்று வெலிங்டன் பகுதியில் ஓர் ஏரி அருகே நீரில் மூழ்கிய கார் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

நீரில் இருந்து அந்த காரை மீட்டெடுத்த பின்னர், அதன் உள்ளே மனித எலும்புகூடு இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த பகுதியில் முன்னர் வசித்த ஒருவர், கூகுள் மேப்ஸ் செயலி மூலம் வில்லியமின் நீரில் மூழ்கிய காரை கண்டறிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறகு இந்நபர் அப்பகுதியில் தற்போது வசிக்கும் தன் நண்பரை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் தனது ட்ரோன் கேமரா மூலம் ஏரி நீரில் ஒரு கார் மூழ்கிய நிலையில் இருப்பதை கண்டறிந்துள்ளார். பிறகு இது தொடர்பாக  பொலிஸாரை  தொடர்பு கொண்டார்.

அதன்பின்னர், துரித நடவடிக்கையில் இறங்கிய பொலிஸார் காரை மீட்டு உடல் எச்சங்களையும் மீட்டுள்ளனர். வில்லியமின் குடும்பத்துக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இரவு 9.30 மணிக்கு, தனது பெண் தோழியை தொலைபேசியில் அழைத்து விரைவாக வீடு திரும்புகிறேன் என்று கூறிய வில்லியம் 22 ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் மேப்ஸ் செயலி மூலம் உடல் எச்சங்களாக கண்டறியப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.