இலங்கை அணியினர் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்வார்கள் என இன்னமும் நம்பிக்கையுடன் இருப்பதாக பாக்கிஸ்தான் அணியின் தலைவர் சப்பிராஸ் அகமட் தெரிவித்துள்ளார்.

ஆண்டவன் அருள் இருந்தால் அவர்கள் வருவார்கள்,நல்லது நடக்கும் என நாங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என சர்பிராஸ் அகமட் தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்கின்றது சர்வதேச போட்டிகள் மீண்டும் பாக்கிஸ்தானில் இடம்பெறவேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையும் ஏனைய நாடுகளும் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைகளும் சர்வதே போட்டிகளிற்கு புத்துயுர் அளிக்கும் பாக்கிஸ்தானின் முயற்சிக்கு உதவவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களாக பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மிகவும் சிறப்பாக செயற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இளையோர் அணியை அனுப்பி பாக்கிஸ்தான் இலங்கைக்கு ஆதரவு வழங்கியது என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கை அணிக்கு எதிரான தொடரை பாக்கிஸ்தானிலிருந்து வேறு பொதுவான மைதானத்திற்கு மாற்றப்போவதில்லை என பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கை அணியுடனான தொடரை பொதுவான மைதானத்திற்கு மாற்றினால் பாக்கிஸ்தானிற்கு சர்வதேச போட்டிகளை மீண்டும் கொண்டுவருவதற்கான முயற்சிகள் பாதிக்கப்படலாம் என பாக்கிஸ்தான் கிரிக்கெட் சபை கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.