ஹட்டன் வட்டவளை விக்டன் தோட்டப்பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தாயின் சடலத்தை மகனும் பேரனும் முச்சக்கர வண்டியில் ஏற்றி செல்லப்பட்டதாக கூறப்பட்ட  நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த சடலம் அவர்களது வீட்டின் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து குறித்த தாயின் சடலம் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் சஞ்சிவ பொன்சேக்கா தலைமையில் விசாரணைகள் மேற்கொண்டு சடலம் மீட்கபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

70 வயதுடைய ராகை என்ற தாயை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அறை ஒன்றில் வைத்து மகன் மருமகள் பேரன் ஆகிய மூவரும் இணைந்து தடியால் தாக்கி வாய் மற்றும் கைகள் கட்டபட்ட நிலையில் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணறு ஒன்றில் மறைத்துவிட்டு மகனும் 13 வயது பேரனும் தலைமறைவாகியிருந்தனர்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த மூதாட்டியின் இரண்டாவது பேரனான 8 வயதுடைய கோபால கிருஸ்ணன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில், தனது பாட்டியை தனது தந்தை மற்றும் அண்ணன் தடியால் அடித்தாகவும் அதன்போது பாட்டியின் கண்களில் இருந்து இரத்தம் வந்ததாகவும் பின்னர் தனது பாட்டியை பொதி ஒன்றில் கட்டி தந்தை எடுத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து  முதலில் பிரதான சந்தேக நபரின் மனைவியை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது நேற்று இரவு மகனும் பேரனும் கைது செய்யபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மகன், தாய், பேரப்பிள்ளை உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதணைஅறிக்கை பெறுவதற்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு சந்தேக நபரை அழைத்து வந்த போது தோட்டமக்கள் இணைந்து குறித்த நபரை தாக்க முற்பட்ட போதும் பொலிஸார் மக்களை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சந்தேக நபர்கள் மூன்றுபேரும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

மேலதிக செய்திகளுக்கு: தாயின் சடலத்தோடு மாயமான மகன், பேரன் ; தீவிர தேடுதலில் பொலிசார் !