அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் ‘வர்ஜீன் ஸ்டார்’ ஜீ வி பிரகாஷ்குமார்  கல்லூரி மாணவராக நடிக்கிறார். 

சிவப்பு மஞ்சள் பச்சை என்ற படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வர்ஜீன் ஸ்டார் ஜீ வி பி நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இவர் வெற்றிமாறனின் உதவியாளராக பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். ஜீ வி பியுடன், வர்ஷா , வாகை சந்திரசேகர், குணா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

ஜீ வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். கே புரொடக்சன்ஸ் சார்பில் ராஜராஜன் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் தொடக்கவிழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

படம் குறித்து இயக்குநர் பேசுகையில், “ கல்லூரி மாணவர் ஒருவருக்கு கல்லூரி வளாகத்திற்கு வெளியே நடக்கும் சம்பவங்களும், அது தொடர்பான எதிர்வினைகளும் தான் திரைக்கதை. இதனை காதல், சென்டிமெண்ட் எக்சன் கொமடி என கொமர்ஷல் அம்சங்களுடன் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஜீ வி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை வர்ஷா நடிக்கிறார். படபிடிப்பை அடுத்த மாதம் தொடங்குகிறோம்.” என்றார். 

நடிகை வர்ஷா விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் பிகில் படத்திலும், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 96 படத்திலும் நடித்திருக்கிறார். கதையின் நாயகியாக நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.