பெண்களில் கர்ப்பப்பை தொடர்பான கட்டிகள் எனகின்ற போது கர்ப்பப்பையில் தோன்றும் பைபுரோயிட் (Fibroid) கட்டிகள், கர்ப்பப்பையின் இருபுறங்களிலுமுள்ள சூலகங்களில் ஏற்படும் சூலகக் கட்டிகள் (Ovarian Cysts) என்பன அடங்கும்.
இவ்வாறான கட்டிகள் உள்ளபோது கர்ப்பந்தரித்தாலோ அல்லது கர்ப்பமாக உள்ளபோது இவ்வாறான கட்டிகள் கண்டறியப்பட்டாலோ மக்கள் மத்தியில் பெரிய ஒரு பயம் ஏற்படுவது வழக்கம். அதாவது கர்ப்பப்பையில் கரு வளரும்போது கட்டியும் சேர்ந்து வளர்ந்து தாயின் உடல் நலத்திற்கோ அல்லது குழந்தையின் ஆரோக்கியத்திற்கோ தீங்கை ஏற்படுத்துமென ஏங்குவது வழக்கம். அத்துடன் இவ்வாறான கட்டிகள் கண்டறியப்படும்போது இதற்கான சரியான தீர்வுகள் என்ன? இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பன குறித்து மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே இதற்குரிய சரியான விளக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் சரியான தீர்வுக்குரிய பாதையில் உங்களை வழிநடத்துவதும் மருத்துவத் துறையினரான எம் கடமை. இதன்போது தான் இதற்கான தீர்வுகளை மருத்துவத்துறையினர் சிபாரிசு செய்யும்போது அவற்றைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் சூலகக் கட்டிகள் கண்டறியப்பட்டால்
(Ovarian, Cysts) அவற்றுக்கான தீர்வுகள்:
கர்ப்ப காலத்தில் நாம் சாதாரண தேவைகளுக்காக ஸ்கான் (Scan) பரிசோதனை செய்யும்போது சூலகக் கட்டிகள் கண்டறியப்படும்.
வேறு சில சந்தர்ப்பங்களில் கர்ப்ப காலத்தில் அசாதாரண வயிற்று வலியைப் பெண்ணொருவர் கூறும்போது நாம் அதற்கான காரணங்களை கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் ஸ்கான் என்பன செய்யும் போது சூலகக் கட்டிகள் அறியப்படுவது வழக்கம்.
இவ்வாறான சூலகக்கட்டிகளில் பெரும்பாலானவை சாதாரண நீர்க் கட்டிகளாகவும் சிறிய பருமன் அல்லது ஒரு தேசிக்காயின் பருமன் கொண்டனவாகவும் காணப்படும். இவற்றுக்கு மேலதிகமான சிகிச்சைகள் எதுவும் தேவைப்படுவதில்லை. ஏனெனில் சில மாதங்களில் இவை தாமாகவே மறைந்துவிடும். ஆனால் சற்றுப் பெரிய பருமனுடைய சூலகக் கட்டிகள் அதாவது ஒரு தோடம்பழத்தின் அளவு அல்லது பெரிய அளவில் கண்டறியப்பட்டால் அவை வயிற்று வலியைத் தோற்றுவிக்கும். அத்துடன் அவை மேலும் வளருகின்றனவா என்பதனை ஓரிரு மாத இடை வெளியில் மீண்டும் செய்யும் ஸ்கான் பரிசோதனையில் கண்டறியலாம். இவ்வாறு மேலும் வளருகின்ற கட்டிகளுக்கும் வயிற்று வலியைத் தோற்றுவிக்கும் சூலகக் கட்டிகளுக்கும் சிகிச்சையாக சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
கர்ப்ப காலத்தில் இவ்வாறான சூலகக் கட்டிகளுக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த முதல் 3 மாதங்களில் சத்திர சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தும் மயக்க மருந்துகளின் தாக்கம் சிசுவைக் கூடுதலாகப் பாதிக்கும் என்பதால் இந்தக் காலப்பகுதியில் இவற்றைக் கூடுதலாகத் தவிர்க்கிறோம். எனவே இவ்வாறான சத்திர சிகிச்சைகளை 4/5 மாத காலப் பகுதியில் மேற்கொள்ள முடியும்.
இந்தக் கட்டிகள் வளராது, எவ்வித வயிற்று வலியையும் தோற்றுவிக்காது மற்றும் ஸ்கான் பரிசோதனையில் எவ்வித ஆபத்துகளுமற்ற நீர்க் கட்டிகள் என கண்டறியப்படும்போது கர்ப்ப காலத்தில் எவ்வித சிகிச்சைகளையும் மேற்கொள்ளாது பிரசவத்தை நிறைவு செய்து அதன் பின் மேலும் 3 மாதங்களின் பின் இக் கட்டிகள் தொடர்பாகப் பரிசீலித்து அவை தொடர்பான சிகிச்சைகளை முன்வைக்க முடியும்.
கர்ப்ப காலத்தில் சூலகக் கட்டிகள் உள்ளபோது ஏற்படக்கூடிய சிக்கல்கள்
இவ்வாறான சூலகக் கட்டிகள் சிறியனவாகவும் எவ்வித சிக்கலும் இல்லாதன வாகவும் காணப்படும். எனினும் சில வளர்ந்து வரும் பெரிய கட்டிகள் வயிற்றுவலி மற்றும் கட்டிகள் முறுக்குப்படுதல், வெடிப்படைதல் போன்றவற்றால் ஏற்படும் உக்கிர வயிற்றுவலி மேலும் சிசு கர்ப்பப்பையினுள் இருக்கும் நிலையில் ஏற்படும் அசாதாரண தன்மைகள் அதாவது குறுக்காக இருக்கும் நிலை மற்றும் குறைமாதப் பிரசவ வலி ஆரம்பித்தல் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
கர்ப்ப காலத்தில் சூலகக் கட்டிகள் உள்ளபோது சாதாரண பிரசவம் முடியுமா?
கர்ப்ப காலத்தில் சூலகக் கட்டிகள் உள்ளபோது சாதாரண பிரசவம் முடியும். ஆனால் சில வேளைகளில் இந்த சூலகக் கட்டிகள் பிரசவப் பாதையைத் தடுக்கும்போது சாதாரண பிரசவத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் இச்சந்தர்ப்பம் குறைவாகவே உள்ளது. சில வேளைகளில் பெரிய சூலகக் கட்டிகள் உள்ளபோது நாம் சிசேரியன் பிரசவத்தை திட்டமிட்டு குழந்தையைப் பிரசவிப்பதுடன் அதேவேளையில் சூலகக் கட்டிகளையும் அகற்றுவோம். இதனால் ஒரே சத்திர சிகிச்சையில் இரு தேவைகளையும் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM