(நா.தினுஷா) 

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாசவுக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதன் போது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்தும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில்  உருவாகவுள்ள புதிய கூட்டணி  குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக  தமிழ் முற்போக்கு கூட்டணியின்  தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை முடிவு செய்யும் நோக்கில் கடந்த  செவ்வாய்க் கிழமை  பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சஜித்  பிரேமதாசவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று  இடம்பெற்றிருந்தது. 

அதன் போது ஜனாதிபதி வேட்பாளர்  விவகாரம் குறித்து ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவ கட்சிகளுடன் பேசி  தீர்மானம்  எடுக்க வேண்டும் என்று பிரதமர் விக்கிரமசிங்க அமைச்சர் சஜித்திடம் வழியுறுத்தியிருந்தார்.  

அதன்  அடுத்த  கட்டமாகவே  முன்னணியின் அங்கத்துவ கட்சிகளுக்கும் சஜித்  பிரேமதாசவுக்கும் இடையிலான  இந்த  சந்திப்பு  இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்தார்.