அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களுடன் தடுமாறி வருகின்றது. 

அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது.

அவுஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், பீட்டர் சிடில் சேர்க்கப்பட்டனர். 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் டிம் பெய்ன் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோ டென்லி (14 ஓட்டம்) கம்மின்சின் பந்து வீச்சில் ஸ்மித்திடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ரோரி பேர்ன்சும், ஜோ ரூட்டும் இணைந்து மதிய உணவு இடைவேளை வரை நன்றாக ஆடி விக்கெட் இழக்காதிருந்தனர்.

ஜோ ரூட் 35 ஓட்டம் எடுத்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 12 ஆவது இங்கிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார். 

அணியின் ஓட்ட எண்ணிக்கை 103 ஆக உயர்ந்த போது ரோரி பேர்ன்ஸ் 47 ஓட்டத்துடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 20 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் ஜோ ரூட் 57 ஓட்டத்துடன் பேட் கம்மின்சின் பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

இதன் பின்னர் இங்கிலாந்து அணி வெகுவாக தடுமாற்றத்திற்கு உள்ளானது. அடுத்த 3 விக்கெட்டுகளை வரிசையாக மிட்செல் மார்ஷ் தகர்த்தெறிந்தார்.

ஒரு பக்கம் விக்கெட் சரிந்ததால் இறுதி கட்டத்தில் ஜோஸ் பட்லர் அதிரடி காட்டினார். ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் 3 சிக்சர்களை பறக்க விட்டார். 

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்களை எடுத்தது.

ஜோஸ் பட்லர் 64 ஓட்டத்துடனும் ஜேக் லெச் 10 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளும், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.