உண்மையான அகதிகளாக இல்லாத தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும் என பெரும்பாலான அவுஸ்திரேலியர்கள் தெரிவித்துள்ளதாக நயூஸ்போல் (Newspoll) கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில், நீதிமன்றத்தால் அகதி இல்லை என சொல்லப்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்களை நாடுகடத்த வேண்டும் என 64 சதவீதம் பேரும் நாடுகடத்தக்கூடாது என 24 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். 

அண்மையில், இலங்கைத் தமிழ் குடும்பம் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்துவது தொடர்பாக நடந்து வரும் விவாதத்தின் தொடர்ச்சியாக இக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலியாவின் பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சி, இக்குடும்பத்தின் நாடுகடத்தல் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தலையிட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என சொல்லி வருகின்றது. இந்த சூழலில், 56 சதவீத லேபர் வாக்காளர்கள் நாடுகடத்தலுக்கு ஆதரவாக இக்கணக்கெடுப்பில் வாக்களித்துள்ளனர். 31 சதவீதம் பேரை தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். 

இதில் ஆளும் லிபரல் கூட்டணியின் வாக்களர்களை பொறுத்தமட்டில், 73 சதவீதமானோர் நாடுகடத்துவதற்கு ஆதரவாகவும் 16 சதவீதமானோர் நாடுகடத்தலை எதிர்த்தும் வாக்களித்துள்ளனர். 

இந்த நிலையில், லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரூசல் பிராட்பெண்ட், தமிழ்க் குடும்பத்தின் தஞ்சக்கோரிக்கை வழக்கை அணுகும் முறை மற்ற தஞ்சக்கோரிக்கை வழக்களிலிருந்து மாறுப்பட்டு இருக்கக்கூடாது என்றும் தலையீடு இருக்கக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.