கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கெய்ல், டிவில்லியர்ஸ், கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தினால் பெங்களூர் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஐ.பி.எல். தொடரின் 48ஆவது லீக் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உத்தப்பா மற்றும் கம்பீர் ஆகியோர் களமிறங்கினர். வந்த வேகத்திலேயே உத்தப்பா 2 ஓட்டங்களுடன் வெளியேற, கம்பீருடன் ஜோடி சேர்ந்தார் பாண்டே. இந்த ஜோடி அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவிக்க, 50 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் பாண்டே ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய பதானும் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். கம்பீர் 51 ஓட்டங்களையும், ரஸல் 39 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 18 ஓட்டங்களையும் விளாச கொல்கத்தா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

184 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

இதில் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் அதிரடியாக 49 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க, கோஹ்லி 75 ஓட்டங்களையும், டிவில்லியர்ஸ் 59 ஓட்டங்களை விளாசி போட்டியை முடித்துவைத்தனர்.