(எம்.எப்.எம்.பஸீர்)

கொட்டாஞ்சேனையில் இருந்து வெல்லம்பிட்டிக்கு செல்லும் போது  கடத்தப்பட்டு உடைமைகள் கொள்ளையிடப்பட்ட பின்னர்  கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் இரு தமிழர்கள் தொடர்பிலான விசாரணைகளின் ஒரு அங்கமாக முன்னாள் கடற்படை தளபதி ஜயந்த பெரேராவிடம் சி.ஐ.டி. விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. 

குற்றப் புலனயவுப் பிரிவின்  சமூக கொள்ளை விசாரணை அறைக்கு ஜயந்த பெரேராவை அழைத்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன்போது அவரிடம் விஷேட வாக்கு மூலம் ஒன்றும் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது வரை குறித்த விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு அமைய  முன்னாள் கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் ரியர் அத்மிரால் ஆனந்த குருகே விரைவில் கைது செய்யப்பட சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாகவும்,  குறித்த சம்பவத்துடன் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்து பல சான்றுகள் வெளிபப்டுத்தப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் குறித்த உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.  

கடத்தப்பட்ட கொல்லப்பட்டதாக நம்பப்படும் குறித்த இரு தமிழர்களுக்குமென்ன நடந்தது என்பது தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதிகளான அத்மிரால் வசந்த கரன்னாகொட, அத்மிரால் ஜயந்த பெரேரா ஆகியோரும் அறிந்திருந்துள்ளதாகவும், அவர்களும் அச்சம்பவத்தை மூடி மறைத்துள்ளதாக சந்தேகிப்பதாகவும் சி.ஐ.டி.தெரிவிக்கின்றது.  

இவ் விரு தமிழர்களின் இக் கடத்தல்கள் இடம்பெறும் போது கடற்படை தளபதியாக வசந்த கரன்னாகொட இருந்தமை,  கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவருக்கு சொந்தமான தொலைபேசியில் கடற்படை தளபதியின் பெயரிலான சிம் அட்டை பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளமை உள்ளிட்ட முக்கிய விடயங்களை  அத்மிரால் வசந்த கரன்னாகொட இதனை அறிந்திருந்தார் என்பதற்கான ஆதாரங்களாக சி.ஐ.டி.  நம்பும் நிலையில் அது தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.