தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை அறிவித்துள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய அணியுடன் 3 இருபதுக்கு - 20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இப் போட்டிகளானது எதிர்வரும் 15 ஆம் திகதி தர்மசாலவில் ஆரம்பமாகவுள்ளது. இருபதுக்கு - 20 போட்டிக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதியும், 2 ஆவது டெஸ்ட் போட்டி புனேவில் 10 ஆம் தேதியும், 3 ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் 19 ஆம் திகதியும் நடக்கிறது.

இந்நிலையில், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணியில் ஷிகர் தவான், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை. ரோகித் சர்மா, சுப்மன் கில் அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதன்படி விராட் கோலி, ரோகித் சர்மா, சடேஸ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானே, மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, ஜஸ்பிரிட் பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.