(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய கட்சி குடும்ப அரசியல் செய்யும் கட்சி அல்ல, ஜனநாயக கட்சியாக நாம் ஆட்சி செய்கின்ற காரணத்தினால்  எமக்கு ஆதரவு வழங்கிய சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியே எமது ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்போம்.

அதேபோல் இம்முறை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், முஸ்லிம் பிரதிநிதிகளினதும் முழுமையான ஆதரவு எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாவும் அவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது. 

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளை இணைத்துக்கொள்வதில் ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து வினவிய போதே கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இவற்றை கூறினர். 

 இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகையில். 

ஒவ்வொரு முறையும் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பின் பின்னரே எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவித்தோம். இம்முறையும் நாம் அவ்வாறே அறிவிப்போம். 

இம்முறையும் சகல கட்சிகளும் எம்முடன் இணைவார்கள்.தமிழ் தரப்பினர், முஸ்லிம் கட்சிகள் அனைவரும் எமக்கு ஆதரவை வழங்குவார்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.