பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு இலங்கை அணியின் சிரேஸ்ட வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளமை குறித்து பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானிற்கான சுற்றுப்பயணத்திலிருந்து விலகியுள்ள பத்து வீரர்கள் குறித்து ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளதாக அக்தர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் எப்போதும் இலங்கை கிரிக்கெட்டிற்கு பெரும் ஆதரவை வழங்கி வந்துள்ளது  என குறிப்பிட்டுள்ள சொயிப் அக்தர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பின்னர் பாக்கிஸ்தான் தனது 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியை இலங்கைக்கு அனுப்பியிருந்தது எனவும்தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 21 தாக்குதலிற்கு பி;ன்னர் தானாக முன்வந்து இலங்கை சென்ற அணியிது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1996 இல் அவுஸ்திரேலிய மேற்கிந்திய அணிகள் இலங்கை செல்ல மறுத்தவேளை  பாக்கிஸ்தான் இதேபோன்று அணியொன்றை இலங்கைக்கு அனுப்பியிருந்தது எனவும் சொயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிடமிருந்து இதேபோன்றதொரு பதில் நடவடிக்கையை எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ள சொயிப் அக்தர் இலங்கையின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  ஒத்துழைப்பு வழங்குகின்றது இலங்கை வீரர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.