(செ.தேன்மொழி)

களுத்துறை மாவட்ட பயாகல பகுதியில் மிக சூட்சுமமான முறையில் சட்டவிரோதமாக செயற்கை கள் தயாரித்து விற்பணையில் ஈடுப்பட்ட சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹகம்மெத்த பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் களுத்துறை விஷ போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது பயாகல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 11 ஆயிரத்து 800 லீட்டர் செயற்கை கள் மீட்கப்பட்டுள்ளது. 

விஷ போதைப் பொருள் பிரிவினர் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பயாகல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.