இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளுமா என்ற கேள்வி தற்போது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

காரணம் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அணியினர் பயணித்த பஸ் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டமையினால், சில வீரர்கள் காயங்களுக்கும் உள்ளாகினர்.

இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை ஏனைய நாடுகள் தவிர்த்து வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பாரிய பின்னடைவினையும், அவப் பெயரினையும் ஏற்படுத்தியிருந்தது.

இந் நிலையிலேயே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்று ஒரு நாள், மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளை இம்மாத இறுதியில் பாகிஸ்தானில் நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டது.

இதனையடுத்து பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தவற்கு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனக் குழுவொன்று கடந்த மாதம் நேரடியாக சென்றிருந்தது. இதில் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வாவும் சென்றிருந்தார்.

குறித்த அந்த குழுவானது கராச்சி, இஸ்லாமபாத் மற்றும் லாகூர் நகரங்களில் இலங்கை கிரிக்கெட் அணியினரை தங்க வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள ஹோட்டல்கள், போட்டி நடைபெறும் மைதானங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதில் எவ்வித அச்சுறுத்தல்களும் இல்லை. அதனால் இத் தொடரில் கலந்துகொள்வோம் என அறிவிப்பு வெளியிட்டனர்.

எனினும் இதனை ஏற்க மறுத்த இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன, லசித் மலிங்க, அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் திக்வெல்ல, குசல் பெரேரா, தனஞ்சய டிசில்வா, திஸர பெரேரா, அகில தனஞ்சய, சுரங்க லக்மால் மற்றும் தினேஷ் சந்திமல் ஆகிய முன்னணி வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி இத் தொடரில் பங்கேற்கமாட்டோம் என்று தட்டிக்களித்தனர்.

இதனைத் தொடர்ந்து லஹிரு திரிமான்னவை ஒருநாள் அணிக்கும், தசுன் சானக்கவை இருபதுக்கு 20 அணிக்கும் தலைவர்களாக நியமித்து பாகிஸ்தான் சென்று விளையாட இலங்கை அணியை தயார் செய்தது இலங்கை கிரிக்கெட் நிறுவனம்.

இதனிடையே நிரோஷன் டிக்வலெ்ல மற்றும் திஸர பெரேரா ஆகியோருக்கு மேற்கிந்தியத்தீவுகளில் நடக்கும் கரீபியன் லீக் இருபதுக்கு - 20 தொடரில் கலந்து கொள்வதற்கான தடையினையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்றுமுன்தினம் விதித்தது.

அது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் இலங்கை கிரிக்கெட் நிறுவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதாவது விளையாட்டுத்துறை அமைச்சர் ஊடாக பிரதமர் அலுவலகத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கை ஒன்று கிடைக்கப்பெற்றதாக தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த எச்சரிக்கையில், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது இலங்கை அணிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதற்கான சாத்தியம் ஒன்று பற்றி நம்பகமான தகவல்கள் பிரதமர் அலுவலகத்திற்கு கிடைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான இலங்கை தேசிய அணியின் திட்டமிடப்பட்டிருக்கும் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை குறித்து மீளாய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை அரசின் உதவியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நாடியுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழு ஒன்று மீண்டும் பாகிஸ்தான் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்ந்து உறுதிப்படுத்திய பின்னரே இலங்கை அணியின் பாகிஸ்தானுக்கான இந்த சுற்றுப் பயணத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் திரும்பியேற்படா விட்டால் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சென்று விளையாடுவது சாத்தியப்படாது என்று தெரிவிக்கப்படுகின்றது. அப்படி பாகிஸ்தான் தொடர் இரத்துச் செய்யப்பட்டால் பொதுவான இடமொன்றில் இந்தத் தொடர் நடத்தப்பட வாய்ப்புள்ளது.

இது இவ்வாறிருக்க இலங்கை அணியானது திமுத் கருணாரத்ன, லசித் மலிங்க, அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் திக்வெல்ல, குசல் பெரேரா போன்ற முன்னணி வீரர்கள் இல்லாமல், அவர்களின் சொந்த மண்ணில் பாகிஸ்தானின் அனுபவம் வாய்ந்த அணியை எப்படி எதிர்கொள்ளும் என்ற கேள்வியும் எழுகின்றது.

அத்துடன் இவ்வாறான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இலங்கை அணிக்கு இந்த சுற்றுப் பயணம் தேவைதானா என்ற கேள்வியும் இலங்கை அணி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.