யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி செயன்முறையில் இளைஞர்களை துடிப்புடன் பங்குபற்ற செய்யும் நோக்கில் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து 120 இற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் சமூக வெற்றியாளர்களாக (Community Champions) பயிற்சி பெற்றனர்.

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இப் பயிற்சியினுடாக குறித்த இளைஞர்களுக்கு சமூக பிரச்சினைகள், சமூக பன்முகத்தன்மை, சமூகத்தின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள், தேவை பகுப்பாய்வு நுட்பங்கள், பிரச்சினைகளை தீர்க்கும் அல்லது கையாளும் முறைகள், மனித உரிமைகள், உரிமை அடிப்படையிலான அணுகுமுறைகள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் திட்ட முன்மொழிவு எழுதுதல் போன்ற தலைப்புகளின் கீழ் சிறந்த வளவாளர்களால் பயிற்சி நடாத்தப்பட்டது.

எதிர்வரும் 6 மாத காலத்தில், குறித்த இளைஞர்கள் குழுக்களாக செயற்பட்டு சமூக பிரச்சினைகளை அடையாளம் கண்டு, நடைமுறை தீர்வுகளுடாக திட்டமொன்றினை உருவாக்கி அதனை சமூக மக்களின் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவார்கள். இறுதியில் திட்ட செயற்பாடு தொடர்பான ஓர் அறிக்கையினையும் கையளிப்பார்கள். இவர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் ஏனைய உதவிகளை SDJF மற்றும் FRC நிறுவனங்கள் வழங்க உள்ளன.

எனக்கு எப்போதும் சமூக சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது ஆனால் அதை எவ்வாறு முறையாக செய்வது என்று எனக்கு தெரியவில்லை. இப் பயிற்சி என்னை முறையாக கற்றுக்கொள்ள வழிவகுத்தது மட்டுமல்லாமல் எனது ஆர்வத்தையும் தூண்டியது.

மேலும் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான வாய்ப்பையும் அளித்தது என மன்னாரைச் சேர்ந்த பயிற்சி பெற்ற எஸ். அமிர்தநாயகி கூறினார்.

 யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொரு பயிற்சி பெற்ற இளைஞன் எம். கேதீஸ்வரன் குறிப்பிடுகையில்,

இப் பயிற்சியானது முறையாக சமூகம் சார்ந்த செயற்பாடுகளை மேற்கொள்ள எம்மை வலுப்படுத்தியது, இதன் மூலம் எமது தனிப்பட்ட மேம்பாடு மாத்திரமின்றி சமூகத்தின் நலனுக்கான சாதகமான மற்றும் நிலைத்து பயனளிக்கும் செயற்பாடுகளை செயற்படுத்த முடியும் என நம்புகின்றேன்.

இச் செயற்றிட்டமானது சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தில் இளைஞர்களின் பங்களிப்பு என்ற UNSCR 2250 கொள்கையினை இலங்கையில் ஊக்குவிக்கும் வகையில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) உருவாக்கியது. 

இச் செயற்றிட்டமானது வட மாகாணத்தில் ''மன வடுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு சேவைகள்'' என்ற திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடனும் குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் (FRC) செயற்பாட்டு உதவியுடனும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.