யாழ்ப்பாணம், கந்தர்மடம் – பலாலி வீதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் புகுந்து சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான அதிதிறனுடைய தொலைபேசிகளைத் திருடிச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“தொலைபேசி விற்பனை நிலையத்திலிருந்து திருடிய தொலைபேசி ஒன்றில் சிம் அட்டையைப் பயன்படுத்தப்பட்டது.

தொலைபேசியின் எமி (EMI) இலக்கத்தை வைத்து அதனைப் பயன்படுத்துபவர் கண்டறியப்பட்டார். அவரை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 19 மற்றும் 20 வயதுடையவர்கள். அவர்கள் கோப்பாயைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்களிடமிருந்து 10 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தர்மடம் பலாலி வீதியின் ஆலடிப் பகுதியில் அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்திற்குள் கடந்த 31ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் கதவுடைத்து உட்புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த தொலைபேசிகளை திருடிச் சென்றனர்.

18 தொலைபேசிகள் திருடப்பட்டன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்த விற்பனை நிலையத்தில் சி.சி.ரி.வி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் முகத்தினை துணியால் மூடிக் கட்டியவாறு திருடர்கள் உள்நுழைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.

கடையில் நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்டு தொலைபேசிகளைத் திருடிய திருடன் ஒருவன் அங்கிருந்து வெளியேறும் சமயம் கைவிரல் அடையாளம் கண்டு கொள்ளமுடியாதவாறு ஓர் துணியினால் தான் கையாண்ட பொருட்கள் மற்றும் இடங்கள் அனைத்தையும் சுத்தம் செய்தமை சி.சி.ரி.வி பதிவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.