(இராஜதுரை ஹஷான்)

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம், அரசியல் தீர்வு உள்ளிட்ட இரண்டு பிரதான விடயங்களும் நிச்சயம் பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கத்தில் நிறைவேற்றப்படும். மக்களாணையினை மதிக்கும் தலைமைத்துவத்தை ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கும் என பாராளுமன்ற உறுப்பினர்  ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாரிய போராட்டத்தின் மத்தியிலே 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. கடந்த நான்கு வருட காலமாக  பாரிய சவால்களுக்கு மத்தியில் நாட்டு மக்களுக்கு பாரிய சேவைகளை வழங்கியுள்ளது. 

அரசியல் சூழ்ச்சிகள் தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஐக்கிய தேசிய கட்சி நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகனை வழங்கியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம்,  புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அரசியல் தீர்வு  ஆகிய  இவ்விரு விடயங்களும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளினால் பிரதானமாக காணப்பட்டது.

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் குறுகிய காலத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கம்,  புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக அரசியல் தீர்வு  ஆகியவை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெறாததினாலும்,  ஆட்சி பீடம் ஏற வழங்கிய  வாக்குறுதிகளை ஒரு தரப்பினர் மறந்தமையினாலும் இவ்வாக்குறுதிகளை அரசாங்காத்தினால் நிறைவேற்ற முடியவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை எந்தளவிற்கு  பாரதூரமானது என்பதை நாட்டு மக்களுக்கு புதிதாக தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது என அவர் இதன்போது தெரிவித்தார்.