(எம்.எப்.எம்.பஸீர்)

சுத்தமான குடி நீரைக் கோரி ஆர்ப்பாட்டம் செய்த ரத்துபஸ்வல பிரதேச மக்கள் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தி, மூவரைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் இராணுவத்தின் பிரிகேடியரான அனுர  தேசப்பிரிய குனவர்தன உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட மா அதிபர் இன்று கம்பஹா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளார். 

வெலிவேரிய – ரத்துபஸ்வல பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி மூன்று பேரை கொலை செய்தமை, தாக்குதல் நடத்தி சிலரை காயப்படுத்தியமை உள்ளிட்ட 94 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரத்துபஸ்வல பகுதியில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது. துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், 12 பேர் காயமடைந்தனர். பிரதேச மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் 21 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.