வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றினுள் வாளுடன் புகுந்து  தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அப்பகுதி மக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். 

இன்று (11.09) புதன்கிழமை காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீட்டிலிலுள்ள ஒருவருக்கும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த இளைஞர்களுக்குமிடையே இன்று காலை வீதியில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் இருவரும் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் வாளுடன் வந்த மூன்று இளைஞர்கள் வீட்டாரை வெளியே வரவழைத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். எனினும் இத் தாக்குதல் சம்பவம் அயலவர்களினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அயலவர்களும் கிராம இளைஞர்களும் இணைந்து மடக்கிப்பிடித்து வீட்டுக்குள் அடைத்து வைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் மூன்று மணிநேரம் கடந்தும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதராத நிலையில் கிராம பொது அமைப்புக்கள் இரு தரப்பினருடனும் கலந்துரையாடி இணக்கத்திற்கு வந்து இளைஞர்கள் கொண்டு வந்த வாளை பொது அமைப்புக்கள் தம்வசப்படுத்தியுள்ளனர்.

இனிமேல் எவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடமாட்டோம் என கிராம பொது அமைப்புக்கள் மற்றும் அயலவர்கள் முன்னிலையில் குறித்த மூன்று இளைஞர்களும் தெரிவித்தமையினையடுத்து அவர்கள் பொதுமக்களினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.