(எம்.மனோசித்ரா)

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைக்கவோ அல்லது அந்த கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, நாட்டின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் பொறுப்பை கையிலெடுத்து சுதந்திர கட்சி செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

துமிந்த திஸாநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார். 

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் குறிப்பிடுகையில், 

நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொறுப்பைக் கையிலெடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. 

இதற்காக அனைவரும் ஒன்றிணையும் சந்தர்ப்பத்தில் குறித்தவொரு கட்சியின் சின்னத்தை மாத்திரம் பயன்படுத்தாது பொது சின்னத்தைத் தெரிவு செய்வதே பொறுத்தமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.