(செ.தேன்மொழி)

அம்பாறை மத்திய பகுதியில் காட்டு யானை தாக்கி சிறுமி யொருவரும் அவரது பாட்டியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவின் 16 ஆம் கொலனிக்கு எதிரே உள்ள விகாரைக்கு அருகில் நேற்று மாலை 6.45 மணியளவில் காட்டு யானையால் தாக்கப்பட்டு சிறுமி யொருவர் உட்பட இருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்வபத்தின் போது படுகாயமடைந்திருந்த இருவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

வீரகொட - சந்தனந்தபுற பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய வித்தானலாகே புஸ்பகாந்தி என்பவரும் , 6 வயதுடைய அவிஷா தெவ்மிணி என்ற அவரது பேத்தியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பாட்டியும் , அவரது பேத்தியும் வீட்டில் அருகில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்கு சென்று வந்துக் கொண்டிருந்தப் போதே இவ்வாறு காட்டுயானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.