(எம்.மனோசித்ரா)

பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் இலங்கையைப் போன்றே சவுதி அரேபியாவினதும் குறிக்கோளாகும் எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு சபாநாயகர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின், பயங்கரவாதம் என்பது குறித்தவொரு சமயத்திற்கோ இனத்திற்கோ வரையறுக்கப்பட்டது அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகைதந்துள்ள சவுதி அரேபியாவின் சபாநாயகர் நேற்று  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார். 

இரு நாடுகளுக்குமிடையே பாராளுமன்ற தொடர்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென சவுதி அரேபியாவின் சபாநாயகர் தெரிவித்த்துடன், இதற்கான புதிய உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 

இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்குமிடையிலான ஒத்துழைப்பினை பல துறைகளில் விரிவுபடுத்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், சவுதி அரேபிய நிதியத்தினூடாக இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாக வழங்கப்பட்டுவரும் உதவிகளுக்கு சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.