(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தை அறிவிக்கும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு காணப்படுகிறது. அதற்கிணங்க ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதாக  அந்த ஆணைக்குழுவின் சட்ட பணிப்பாளர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார். 

எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதிக்கும் டிசம்பர் 8 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. 

டிசம்பரில் இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைகள் இடம்பெறவிருப்பதால் , பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் தேர்தல்களை நடத்துமாறு பரீட்சைகள் ஆணையாளரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எனவே ஒக்டோபரில் ஜனாதிபதித் தேர்தலுக்கான தினமும், இம் மாதத்தில் வேட்புமனு தாக்கலுக்கான தினமும் அறிவிக்கப்படும். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 2018 வாக்காளர் இடாப்பும் கவனத்திற்கொள்ளப்படும் .

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுமார் 18 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. சுயாதீனமாக ஒருவரும், ஏனைய 17 பேரும் பிரதான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாவர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக சட்ட ரீதியிலான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.