இலங்கை அணி வீரர்கள் பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுத்துள்ளமைக்கு இந்தியாவின் மிரட்டலே காரணம் என வெளியாகியுள்ள தகவல்களை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ மறுத்துள்ளார்.

இலங்கை வீரர்களை பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டாம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2009 சம்பவத்தின் காரணமாகவே சில வீரர்கள் பாக்கிஸ்தான் செல்வதில்லை என தீர்மானித்தனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் முடிவுகளை மதித்து நாங்கள் புதிய அணியை தெரிவுசெய்துள்ளோம் என குறிப்பிட்டுள்ள இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் எங்களிடம் வலுவான அணியுள்ளது நாங்கள் பாக்கிஸ்தானை பாக்கிஸ்தானில் தோற்கடிக்கவிரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் ஐபிஎல் போட்டிகளில் இடமளிக்கமாட்டோம் என இந்தியா இலங்கை வீரர்களை அச்சுறுத்தியது என பாக்கிஸ்தானின் விஞ்ஞான மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் பாவட் சௌத்திரி  தெரிவித்துள்ளதை தொடர்ந்தே இலங்கை அமைச்சர் இந்த செய்தியை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியி;ல் இலங்கை பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை கைவிடவேண்டும் அல்லது ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களிற்கு இடமளிக்கமாட்டோம் என இந்தியா மிரட்டியது என கிரிக்கெட் விவகாரங்கள் குறித்து நன்கு அறிந்த வர்ணனையாளர் ஒருவர் எனக்கு தெரிவித்துள்ளார் என பாக்கிஸ்தான் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.